பள்ளி மாணவர்கள் மூவர் சடலம் மீட்பு; கொலையா என விசாரணை
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே, பள்ளி மாணவர்கள் மூவர் ஏரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் முகம் தீயில் கருகியது போல் இருப்பதால், கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட விழுதவாடி கிராமத்தில் உள்ள ஏரியில் முகங்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில், 3 உடல்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் சடலங்களை மீட்டனர்.
விசாரணையில், உயிரிழந்தவர்கள், பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த பரத்,17, சத்ரியன்,17, விஷ்வா,17, ஆகிய 3 பேரும் வாலாஜாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தது தெரிய வந்தது.
மாணவர்களின் முகத்தில் தீக்காயம் போன்று இருந்துள்ளது. முன்விரோதம் காரணமாக மூவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பரத்திற்கும், சிறுமையிலூர் கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய நபருக்கும் மோதல் இருந்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேத பரிசோதனைக்காக உடல்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.