இணைப்பை துண்டிக்காமல் பணி ஈசூரில் மின் வாரிய ஊழியர் பலி

மதுராந்தகம், பவுஞ்சூர் அடுத்த பாலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபால், 45. இவர், பூதுார் துணைமின் நிலையத்தில், ஒயர்மேனாக பணி செய்து வந்தார்.

மதுராந்தகம் மின் நிலையத்தில் இருந்து, பூதுார் துணைமின் நிலையத்திற்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம், ஈசூர் பகுதியில், தனியார் ரைஸ் மில் அருகே பனை ஓலை விழுந்து உள்ளது. இதனால், அடிக்கடி மின்சாரம் தடைபட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி துணைமின் நிலையத்திற்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்பாதை ஆய்வாளர் சங்கர் மற்றும் ஒயர்மேன் பூபால் ஆகியோர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, ஈசூர் பகுதியில், மின்சாரத்தை துண்டிக்காமல், மின் கம்பத்தில் ஏறிய பூபால், மின்சார ஒயர் மீது தொங்கி கொண்டிருந்த பனை ஓலையை எடுக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்தது.

மின் கம்பத்தில் மயங்கிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்த பூபாலை, பூதுார் ஊராட்சி தலைவர் சுரேஷ் மற்றும் மின்பாதை ஆய்வாளர் சங்கர் ஆகியோர் மீட்டனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, பூபாலை கொண்டு சென்ற போது, செல்லும் வழியிலேயே பூபால் உயிரிழந்தார்.

பின், உடலை மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு, உடற்கூறாய்வுக்கு கொண்டு சென்றனர்.

மின்சாரத்தை துண்டிக்காமல் பணி செய்த மின்பாதை ஆய்வாளர் சங்கர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், பூபால் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

Advertisement