பதவி நீக்கப்பட்ட தென் கொரிய அதிபர் கைது

சியோல், அவசரநிலையை அறிவித்ததால் பார்லிமென்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் வீட்டுக்குள் நுழைந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், போராடி அவரை கைது செய்தனர்.

கிழக்காசிய நாடான தென் கொரியாவில் பட்ஜெட் மசோதாக்கள் தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்தாண்டு டிச., 3ல் அவசரநிலையை அறிவித்தார் அந்த நாட்டின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல்.

தேச துரோகம்



உடனடியாக பார்லிமென்ட் கூடி, அவசரநிலை அறிவிப்பை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியது. இதனால், சில மணி நேரங்களில் அவசரநிலை அறிவிப்பை யூன் திரும்பப் பெற்றார்.

இதைத் தொடர்ந்து பார்லிமென்ட் மீண்டும் கூடி, அதிபர் பதவியில் இருந்து இயோலை நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால், இதை ஏற்க மறுத்து, இறுதி வரை போராடப் போவதாக இயோல் அறிவித்தார்.

அவசரநிலையை அறிவித்து தேச துரோகம் செய்ததாக இயோலுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவசரநிலை அறிவித்ததில் சதி ஏதும் உள்ளதா என்பதை விசாரிக்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், ராணுவம் மற்றும் போலீசுடன் இணைந்து விசாரணையை துவக்கினர். விசாரணைக்கு ஆஜராகும்படி இயோலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக மறுத்து வந்தார்.

சியோலின் ஹன்னம்டாகில் உள்ள அதிபர் மாளிகையில் இருந்து அவர் வெளியேற மறுத்தார். அவருடைய வீட்டுக்குச் சென்று விசாரணை செய்ய ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் முயற்சி செய்தனர். ஆனால், அதிபரின் பாதுகாப்புப் பிரிவினர் அதற்கு அனுமதி மறுத்தனர்.

சிறையில் அடைப்பு



மேலும், அதிபர் வீட்டைச் சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டது. அதிகாரிகள் உள்ளே நுழைய முடியாதபடி, அதிபர் மாளிகையின் கதவை ஒட்டி, பல பஸ்களை வரிசையாக நிறுத்தி வைத்தனர்.

கடந்த, 3ம் தேதி அதிபர் மாளிகைக்கு சென்ற ஊழல் தடுப்புப் பிரிவினரை, அதிபரின் பாதுகாப்புப் பிரிவினர் விரட்டியடித்தனர்.

இதையடுத்து, போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்புடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று அதிபர் மாளிகைக்கு சென்றனர். ஆனால், உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.

ஏணிகள் வைத்து அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். அங்கு தடுப்பாக வைக்கப்பட்டிருந்த பஸ்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான வாகனங்களில் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். மூன்று மணி நேர போராட்டத்துக்குப் பின், இயோல் கைது செய்யப்பட்டு, ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு, 10 மணி நேர விசாரணைக்கு பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement