காங்., - எம்.பி., ராகுல் மீது பா.ஜ., தலைவர்கள்...பாய்ச்சல் பிரிவினையை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு
புதுடில்லி : ''பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அரசையும் எதிர்த்து போராடுகிறோம்,'' என தெரிவித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த ராகுல் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தலைநகர் டில்லியில், காங்கிரசின் புதிய தலைமை அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. 'இந்திரா பவன்' என பெயரிப்பட்ட இந்த அலுவலக திறப்பு விழாவில் ராகுல் பேசியதாவது:
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின் தான், நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகவும், 1947ல், சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசி உள்ளார்.
மேலும், அரசியலமைப்பு நம் சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்றும் அவர் கூறி உள்ளார்.
அவமதிப்பு
அரசியலமைப்பு சட்டம் செல்லாது; ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திர போராட்டம் செல்லாது என்றும் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
மோகன் பகவத் பேசியது, தேச துரோகத்துக்கு சமம். 1947ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை எனக் கூறி, நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியரையும் அவர் அவமதித்துள்ளார்.
வேறு எந்த நாட்டிலாவது அவர் இது போன்று பேசியிருந்தால், இந்நேரம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார். இது தான் உண்மை.
பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை எதிர்த்து, நாங்கள் போராடுகிறோம் என நீங்கள் நம்பினால், என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு புரியவில்லை என, அர்த்தம்.
பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் நம் நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் கைப்பற்றியுள்ளன. தற்போது நாங்கள், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்திய அரசையே எதிர்த்து போராடுகிறோம்.
இன்று ஆட்சியில் இருப்பவர்கள் மூவர்ணக் கொடியை வணங்குவதில்லை; அரசியலமைப்பை நம்புவதில்லை. அவர்கள் நம் நாட்டை பற்றி மாறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளனர்.
நம் நாட்டை தனி மனிதன் வழிநடத்த வேண்டும் என, அவர்கள் விரும்புகின்றனர்.
தேர்தல்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது தேர்தல் கமிஷனின் கடமை. ஆனால், தேர்தலை தேர்தல் கமிஷன் நடத்தும் விதம் எங்களுக்கு பிடிக்கவில்லை.
மஹாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலை காட்டிலும், சட்டசபை தேர்தலில் ஒரு கோடி வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இது குறித்து தகவல் கேட்டால், தேர்தல் கமிஷன் தர மறுக்கிறது. இதன் நோக்கம் என்ன?
இவ்வாறு அவர் பேசினார்.
கண்டனம்
நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக ராகுலுக்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான நட்டா கூறுகையில், ''இந்தியாவை உடைத்து, சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த ராகுல் முயற்சிக்கிறார்.
''பலவீனமான இந்தியாவை விரும்பும் அனைத்து சக்திகளையும் ஊக்குவித்த ஒரு வரலாற்றை காங்., கொண்டுள்ளது. ராகுலையும், அவரது அழுகிய சித்தாந்தத்தையும் நிராகரிக்க நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளனர்,'' என்றார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'அரசியலமைப்பின் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்ற கட்சி, தற்போது, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., மட்டுமல்லாது இந்திய அரசையும் எதிர்த்து போராடுவதாக கூறுகிறது.
'அப்படியானால், ராகுல் எதற்காக அரசியலமைப்பின் நகலை கையில் வைத்திருக்கிறார்?' என கேள்வி எழுப்பினார்.