பொங்கல் வைப்பதில் இருதரப்பு மோதல்; தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, பொங்கல் வைப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் வாடமங்கலம் பஞ்சாயத்தை சேர்ந்த, 102 பேருக்கு, கடந்த, 1983ல் அரசு சார்பில் வழங்கப்பட்ட, 5.62 ஏக்கர் நிலத்தில் வீடுகள் கட்டி வசிக்கின்றனர். அந்த நிலம் வழங்கிய குட்டியப்பன் என்பவரது தரப்பில், அவரது மகன்கள், பேரன்கள் அந்த இடத்தில், 8 சென்ட் நிலம் தங்களுக்கு சொந்தம் எனவும், அதில், எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது எனவும் கூறியுள்ளனர்.
நேற்று, வாடமங்கலம் காலனியில் வசிப்போர் ஒன்று கூடி, விளையாட்டு மைதானத்தில் பொங்கல் வைக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த குட்டியப்பனின் பேரன்கள் லட்சுமணன், 41, திருப்பதி, 30, மற்றும் குடும்பத்தினர், பொங்கல் வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். பாரூர் போலீசார் அங்கு வந்தபோது, இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், லட்சுமணன், திருப்பதி ஆகியோர், தங்கள் மனைவியருடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர். அதை போலீசார் தடுத்து, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.
பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன், போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா தலைமையில், பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இந்த விவகாரம் குறித்து ஓரிரு நாட்களில் பேசி முடிவு செய்யலாம் என கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.