முன்னாள் அ.தி.மு.க., எம்.பி., பி.ஆர்.சுந்தரம் காலமானார்
நாமக்கல்: அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.பி., பி.ஆர்.சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 73.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் பி.ஆர்.சுந்தரம். அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கடந்த 1996 தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் தமிழகத்தில் வெற்றி பெற்ற நான்கு எம்.எல்.ஏக்களில் இவரும் ஒருவர். ராசிபுரம் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ., ஆக இருந்த அவர், 2014 முதல் 2019 வரை நாமக்கல் தொகுதி எம்.பி., ஆகவும் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, ஓ.பி.எஸ்.,க்கு ஆதரவு அளித்து வந்தார். இரு அணிகளும் இணைந்த நிலையில், அ.தி.மு.க.,வில் அவருக்கு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் 2021 தேர்தலுக்குப் பிறகு தி.மு.க.,வில் இணைந்து கொண்டார். இருப்பினும், அரசியலில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சுந்தரம், இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.