கட்டப்பஞ்சாயத்தில் ஊரை விட்டு ஒதுக்கியதால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு
கிருஷ்ணகிரி: கட்டப்பஞ்சாயத்து நடத்தி, ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால், மனமுடைந்த மாற்றுத்திறனாளி தீக்குளித்தார்.
கிருஷ்ணகிரி அடுத்த மல்லிநாயனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட எலுமிச்சங்கிரியை சேர்ந்தவர் வெங்கடேசன், 53, கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. இவருக்கு, மனைவி, மகன், மகள் உள்ளனர். எலுமிச்சங்கிரியிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகிகள் தேர்வில் இவருக்கும், நிர்வாகத்தினருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால், வெங்கடேசன் குடும்பத்தை, ஊரை விட்டு தள்ளி வைப்பதாக, ஊர் கவுண்டர்கள், பெரியவர்கள் கூறியுள்ளனர். கட்டப்பஞ்சாயத்து நடத்தி, தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கடந்த, 8ல் மாவட்ட கலெக்டர், எஸ்.பி., ஆர்.டி.ஓ., பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வெங்கடேசன் மனு அளித்தும், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நேற்று மதியம், வெங்கடேசன் எலுமிச்சங்கிரி அரசு துவக்கப்பள்ளி முன், தன் உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்தார். அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து அவரை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகாராஜகடை போலீசாரிடம், வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
எங்கள் ஊரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, என்னை ஊரை விட்டு ஒதுக்கியதாக, ஊர் கவுண்டர்கள் உள்ளிட்ட, 8 பேர் மீது அதிகாரிகளிடம் புகாரளித்தேன். யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன், அ.தி.மு.க.,வில் சேர்ந்தேன். அதற்கு, தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் நிர்வாகி, அவரது மகன் மற்றும் சிலர் என்னை மிரட்டினர். கடும் மன உளைச்சலுக்கு ஆளானதால், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன். இதற்கு முக்கிய காரணம் கட்டப்பஞ்சாயத்து நடத்திய ஊர் கவுண்டர்கள் தான். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
உடலில், 45 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், வெங்கடேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகாராஜகடை போலீசார்
விசாரிக்கின்றனர்.