டில்லிக்கு ஆரஞ்ச் அலர்ட்; கடும் பனிமூட்டத்தால் ரயில், விமான சேவை பாதிப்பு
புதுடில்லி: டில்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வரும் நிலையில், ரயில்கள் மற்றும் விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் டில்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. நேற்று காலை 11.30 மணிவரை இதேநிலை நீடித்தது. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்தப் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்சேவைகளில் தாமதம் ஏற்பட்டது. நேற்று மட்டும் 100 விமானங்களின் சேவை மற்றும் 26 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தலைநகர் டில்லியில் கடுமையான பனிப்பொழிவுக்கான ஆரஞ்ச் அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக, இன்று காலை 29 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. அதேபோல, விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
டில்லி மக்களுக்கு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் விடுத்துள்ள அறிவுறுத்தலில், "வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி, சாலைகளில் கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும். அதேபோல, பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்கள், ரயில்வே துறையினரிடம் தொடர்பு கொண்டு பேசி தங்கள் பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்", என்று கேட்டுக் கொண்டனர்.