நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பார்வையற்ற வீராங்கனை
சிக்கமகளூரில் உள்ள பாலுகுடனஹல்லி எனும் கிராமத்தில் 2001ம் ஆண்டு பிறந்தார் ரக்ஷிதா ராஜு, 24. இவருக்கு பிறவியிலே கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டு உள்ளது.
ரக்ஷிதா ராஜு, தனது 2 வயதில் தாயை இழந்தார். 10 வயதில் தந்தையை இழந்தார். ஆனால், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.
இதன்பின், அவருடைய பாட்டி தான் அவரை வளர்த்து உள்ளார். சிக்கமகளூரில் உள்ள அஷாகிராணா பார்வையற்றோர்க்கான பள்ளியில் படித்தார்.
அப்போது, பாலகிருஷ்ணா எனும் ஆசிரியர் இவருக்கு ஓட்டப்பந்தயத்தை அறிமுகம் செய்தார். ஓடுவதற்கு பயிற்சி அளித்தார். சவுமியா என்பவர் இவருக்கு பயிற்சிகள் அளித்து உள்ளார்.
இதனால், ரக்ஷிதாவிற்கு படிப்பில் இருந்த ஆர்வத்தை விட, ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் அதிகமாகி உள்ளது.
இதன் காரணமாக பள்ளி படிப்பின் போதே ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு, பரிசுகளையும் பெற்று உள்ளார். படிப்படியாக முன்னேறி தன்னுடைய திறமையை, மாவட்டம் தாண்டி மாநிலம் வரை அறிய செய்தார்.
கடந்த 2016ம் ஆண்டு, டில்லியில் நடந்த பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான ஓட்டப்பந்தய போட்டியில் கர்நாடகா சார்பில் கலந்து கொண்டார்.
இதில் 400 மீட்டருக்கான போட்டியில் வெற்றி பெற்றார். 2019ம் ஆண்டில் நடந்த உலக அளவிலான பாரா தடகள போட்டியில், 1500 மீட்டர், 800 மீட்டர் போட்டிகளில் கலந்து கொண்டு தங்க பத்தகம் வென்றார்.
பின், 2018 மற்றும் 2023ல் ஆசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில், ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் பங்கு பெற்று வெற்றி பெற்றார்.
இவரின் வாழ்க்கையில் மைல் கல்லாக, 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் பங்கு பெற்றார். பார்வையற்றோருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 4வது இடத்தை பிடித்தார்.
பதக்கங்கள் ஏதும் பெறவில்லை என்றாலும், வரும் போட்டிகளில் பதக்கங்கள் பெறுவேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
- நமது நிருபர் -