சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3வது ஆண்டாக சரிவு
பீஜிங்: சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3வது ஆண்டாக குறைந்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்தில் இருந்த சீனா, பல்லாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2வது மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம், கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வருகிறது.
குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான அதிகச் செலவு, வேலையின்மை தான், சீனா இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தவிர்ப்பதற்கான காரணம் என மக்கள்தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மக்கள் தொகை குறித்து, சீனாவின் புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனாவில் கடந்த 2023ம் ஆண்டு மக்கள்தொகை 140 கோடியே 90 லட்சமாக இருந்தது. இதில் 2024ம் ஆண்டில், 13 லட்சத்து 90 ஆயிரம் குறைந்துள்ளது.
2023ம் ஆண்டு சீனாவில் 90 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. 2024ம் ஆண்டில் 95 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. 2023ம் ஆண்டில் ஆயிரம் பேருக்கு 6.39 ஆக இருந்த குழந்தை பிறப்பு விகிதம் 2024ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 6.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2023ம் ஆண்டில், மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சமாக இருந்தது. 2024ம் ஆண்டில் ஒரு கோடியே 93 லட்சமாக இருந்தது.
சீனாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 2024ம் ஆண்டில் 31 கோடியாக அதிகரித்து உள்ளது, இது மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதம் ஆகும். இந்த எண்ணிக்கை 2023ம் ஆண்டில் 29 கோடியே 69 லட்சமாக இருந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.