நடு ரோட்டில் நடந்த கருணாநிதி; ஓடிச்சென்று அழைத்த எம்ஜிஆர்!!
(இன்று எம்ஜிஆர் பிறந்தநாள்)
முன்னாள் பிரதமர் இந்திராவால் 1969ம் ஆண்டு 3வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் வி.வி.கிரி. ஓய்வு பெற்ற பிறகு 1980 ஜுன் 23ல் சென்னையில் காலமானார். அவர் வீடு இருந்த தி.நகர் ஜி என் செட்டி சாலையில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. கிரி உடலை தகனம் செய்யும் சுடுகாட்டு மையத்தில் ஏராளமான விவிஐபிக்கள் குழுமி இருந்தனர். முப்படைத் தளபதிகளும் அவர்களில் அடக்கம். அவர்களோடு செய்தியாளர் என்ற வகையில் நானும் இருந்தேன்.
கிரியின் இறுதிச் சடங்குகள் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் அதன் முழு பொறுப்பையும் மத்திய அரசின் விதிமுறைப்படி, ராணுவம் ஏற்றுக் கொண்டது. கிரியின் உடல் இறுதிப் பயணத்திற்குத் தயாரான நிலையில் கிரியின் வீட்டுக்கே சென்று இறுதி அஞ்சலி செலுத்தலாம் என்ற எண்ணத்தோடு தன் காரில் கருணாநிதி கிளம்பிச் சென்றார். அண்ணா மேம்பாலம் அருகே ஏராளமான கூட்டம் இருந்தது. வாகனங்கள் நகர முடியாத அளவுக்கு நெரிசல். இறுதி சடங்குக்கான நேரமோ நெருங்குகிறது. வாகனத்துக்கோ வழி இல்லை.
சில நிமிடங்கள் யோசித்த கருணாநிதி, காரை விட்டுச் ரோட்டில் இறங்கினார். கிரி தெருவை நோக்கி நடக்கத் தொடங்கினார். இதே நேரத்தில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆரின் கார், மேம்பாலம் அருகே வந்தது. குதிரை வீரன் சிலை இருக்குமிடம் வரை வந்த கார், கூட்டம் காரணமாக நகர முடியாமல் நின்றது. ஒருபுறம் எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதி காரும், மறுபுறம் முதல்வர் எம்ஜிஆர் காரும் தடுத்து நிறுத்தப்பட்டன.
உடனே போலீஸ் அதிகாரிகள் முதல்வரின் கார் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். காரில் அமர்ந்திருந்த எம்ஜிஆரின் பார்வையில் கருணாநிதி பட்டுவிட்டார். கருணாநிதி ரோட்டில் நடந்து போவதைப் பார்த்த, எம்ஜிஆர், காரை விட்டு இறங்கி வேகமாகச் சென்று, கருணாநிதியைப் பிடித்து விட்டார். அந்த சாலையில், வாகன நடமாட்டம் இல்லாத நிலையில், இருவர் மட்டும் சந்தித்துக் கொண்டு, பழைய விஷயங்களை பேசிக் கொண்டனர்.
பின்னர் கருணாநிதியை அழைத்துக் கொண்டு, தன் கார் வரை வந்த எம்ஜிஆர், அவரையும் தன் காரில் ஏற்றிக்கொண்டு கிரி தெருவுக்குப் புறப்பட்டு விட்டார்.
உடல் தகனம் செய்யப்படும் இடத்தின் அருகே காரில் இருந்து எம்ஜியாரும், கருணாநிதியும் ஒன்றாக இறங்கியதைக் கண்டு அங்கு இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பரஸ்பரம் பாசத்துடன் அவர்கள் நடந்துகொண்டதை மக்கள் புரிந்துகொண்டனர். இன்று எம்ஜிஆரின் பிறந்த நாளை ஒட்டி இந்த சம்பவம் என் மனதில் நிழலாடுகிறது.
- நூருல்லா, ஊடகவியலாளர்
9655578786