மஹா கும்பமேளாவில் பங்கேற்க இலவச யாத்திரை; மூத்த குடிமக்களுக்கு அறிவித்தது ஹரியானா அரசு!
சண்டிகர்: மஹா கும்பமேளாவில் பங்கேற்க மூத்த குடிமக்களுக்கு இலவச யாத்திரை பயணங்கள் ஏற்பாடு செய்யப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி கோலாகலமாக துவங்கியது. அடுத்த மாதம் மஹா சிவராத்திரி நாளான பிப்., 26 வரை கும்பமேளா நிகழ்ச்சி நடக்கிறது.
இதில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால், பிரயாக்ராஜ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 4 நாட்களில் 7 கோடி பேர் புனித நீராடி உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
கும்பமேளாவில் பங்கேற்பது தொடர்பாக ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வரின் தீர்த்த தரிசன யோஜனா திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்கள், பயனாளிகளுக்கு செலவில்லாமல், அரசு செலவில் கும்பமேளாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
கும்பமேளாவின் போது மூத்த குடிமக்கள் பயணம் செய்வதற்கும் தங்குவதற்கும் வசதியாக, இந்தத் திட்டம் செயல்படுத்துவதை அரசு உறுதி செய்யும். இந்த திட்டம் ஆன்மிக மற்றும் கலாசார மகத்துவத்தை வயதானவர்கள் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.