சொத்து விபரம் வெளியிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்: அனைத்து அரசு ஊழியர்களிடமும் எதிர்பார்ப்பு!
கோவை: கோவையில் பணிபுரிந்த மற்றும் பணிபுரிந்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சொத்துப்பட்டியல், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான இணைய தளத்தில் வெளிப்படைத் தன்மையோடு பதிவேற்றப்பட்டுள்ளது. இதே போல், அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், உயரிய அதிகாரம் படைத்தவர்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள். துறை செயலர்கள், இணை செயலர்கள், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு உயரிய பணியிடங்களில் நியமிக்கப்படுகின்றனர். தலைமை பொறுப்பில் உள்ள, இந்திய ஆட்சி பணியாளர்களான (ஐ.ஏ.எஸ்.,) இவர்கள், வெளிப்படைத்தன்மையுடன் தங்களது சொத்து பட்டியலை, ஆண்டுக்கு ஒருமுறை வெளியிட வேண்டுமென, மத்திய அரசின் உள்துறை செயலகம் உத்தரவிட்டது.
அதையேற்று, அதிகாரிகள் ஒவ்வொருவரும் தங்களது சொத்து பட்டியலை, https://services.eoffice.gov.in என்கிற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். சிலர், தங்களது பெயரில் உள்ள சொத்து விபரங்களை கூறியுள்ளனர். சில அதிகாரிகள், தங்கள் குடும்ப சொத்தை தெரிவித்துள்ளனர். சிலர், அதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் கூறியிருக்கின்றனர்.
கோவையில் இதற்கு முன் பணிபுரிந்த/பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்கள் சொத்து விபரங்களை, அந்த இணைய தளத்தில் வெளிப்படையாக, தங்கள் கையெழுத்துடன் பதிவேற்றம் செய்துள்ளனர்.தற்போது தலைமை செயலராக இருக்கும் முருகானந்தம், கோவையில் கலெக்டராக பணிபுரிந்தவர். அவர், தனது குடும்பத்துக்கு எட்டு சொத்துக்கள் இருப்பதாகவும், மதிப்பு, 17.31 கோடி ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் கமிஷனராக இருக்கும் அர்ச்சனா பட்நாயக், கோவை கலெக்டராக பணிபுரிந்தவர்; 89.56 லட்சம் ரூபாய்க்கு சொத்து இருப்பதாக கூறியுள்ளார். மாநகராட்சி கமிஷனராக இருந்த கார்த்திகேயன், நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலராக இருக்கிறார். இவர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குடும்பச் சொத்துக்களை தெரிவித்திருப்பதோடு, சென்னை மற்றும் காஞ்சி புரத்தில் உள்ள பிளாட்டுகளையும் பட்டியலிட்டுள்ளார். சொத்து மதிப்பு ரூ.6.09 கோடி என தெரிவித்துள்ளார்.
தற்போதைய கலெக்டர் கிராந்திகுமார், தெலுங்கானாவில் உள்ள குடும்ப சொத்தில் தனது பங்கு மதிப்பு ரூ.6 லட்சம் என கூறியிருக்கிறார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், சென்னை கோயம்பேடு பகுதியில் தமிழ்நாடு வீட்டு வாரியத்தின், 'சொந்த வீடு' திட்டத்தில், டைப்-2 பிரிவில் வீடு கட்டி வருவதாக குறிப்பிட்டிருக்கிறார். இதன் தோராய மதிப்பு=ஒரு கோடியே, 16 லட்சம் ரூபாய் இருக்குமென தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி கமிஷனராக இருந்த ஷ்ரவன்குமார், தெலுங்கானாவில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலம் இருப்பதாகவும், ஆண்டுக்கு 9.5 லட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பதாகவும் கூறியுள்ளார். முந்தைய மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் பொள்ளாச்சி சப்-கலெக்டராக உள்ள கேத்ரீனா சரண்யா ஆகியோர், தங்கள் சொத்து மதிப்புகளை குறிப்பிடவில்லை.
இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சியாளர் ஹக்கீம் கூறுகையில், ''தமிழகத்தில் அரசு துறைகளில் தலைமை பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தங்களது சொத்து மதிப்பை வெளிப்படையாக அறிவித்திருக்கின்றனர். இதே போல், வி.ஏ.ஓ.,க் கள் முதல் அனைத்து அரசு ஊழியர்களும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்,'' என்றார்.
இதோ சொத்து மதிப்பு!