பரந்தூர் போகலாம்; ஆனால் நிபந்தனைகள் உண்டு! நடிகர் விஜய்க்கு போலீசார் கட்டுப்பாடு

1

சென்னை: பரந்தூர் சென்று போராட்டக்குழுவை சந்திக்கும் நடிகர் விஜய்க்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.


@1brகாஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் 2வது பசுமை விமான நிலையம் அமைக்கப்படுகிறது. அதற்கு பணிகள் தொடங்கிய நிலையில், விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


900 நாட்களை கடந்து அங்குள்ள பல்வேறு கிராம மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பும், ஆதரவும் தெரிவித்துள்ளன.


தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதியதாக கட்சி ஆரம்பித்து உள்ள நடிகர் விஜயும் பரந்தூர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமது கட்சியின் முதல் மாநாட்டில் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பும் தெரிவித்து இருந்தார்.


போராட்டக்களத்தில் இருக்கும் ஊர் மக்களை சந்திக்கவும் அவர் திட்டமிட, அதற்கான அனுமதியையும் தமிழக காவல்துறை வழங்கி உள்ளது. வரும் 20ம் தேதி (ஜன.) அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்திக்கிறார்.


இந் நிலையில் போராட்டக்களம் நோக்கி செல்ல இருக்கும் நடிகர் விஜய்க்கு போலீசார் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சந்திப்பு நடக்க வேண்டும்.


சந்திப்பின் போது அதிகப்படியான கூட்டத்தைக் கூட்டக்கூடாது, அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அங்கு வரவேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்குள் கூட்டத்தை முடித்து விட வேண்டும் ஆகிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.


போலீசாரின் அனுமதி மற்றும் கட்டுப்பாடுகளை ஏற்று போராட்டக் குழுவை நடிகர் விஜய் சந்திப்பார் என்று த.வெ.க., நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் யார், யாரை சந்திக்கிறார், அவர்களை தேர்ந்தெடுப்பது எப்படி என்பது பற்றிய விவரங்களை கட்சி நிர்வாகிகள் வெளியிடவில்லை.


அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய், முதல்முறையாக மக்களை நேரிடையாக களத்தில் சந்திக்கிறார் என்பதால் இந்த நிகழ்வு அரசியல் கட்சிகள் மத்தியில் மிகவும் உன்னிப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement