பெங்களூரு, கோவைக்கு ஆம்னி! திருச்சி, மதுரைக்கு அரசு பஸ்; பயணிகள் விருப்பம் இதுதான்!
சென்னை; திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்குச் செல்ல அரசு பஸ்களில் நிறைய பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்ட விவரம் வெளியாகி இருக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு வழக்கம் போல் இந்தாண்டும் லட்சக்கணக்கானோர் சென்றார். பண்டிகை காலம் முடிந்து அவரவர் வசதிக்கு ஏற்ப அரசு பஸ், ரயில்கள், ஆம்னி பஸ்களில் சென்னை திரும்பி வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பயணத்தை முன்னரே திட்டமிட்டு, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். அதில் குறிப்பிட்ட சில நகரங்களுக்குச் செல்ல அதிகம் பேர் அரசு பஸ்களையும், மற்ற நகரங்களுக்கு சொகுசான ஆம்னி பஸ்களையும் தேர்வு செய்த விவரம் வெளியாகி இருக்கிறது.
அதுபற்றிய விவரம் வருமாறு;
மலைக்கோட்டை நகரான திருச்சிக்கும், மல்லிகை நகரான மதுரைக்கும் பெரும்பாலான மக்கள் அரசு பஸ்களைத் தான் தேர்வு செய்திருக்கின்றனர். பெங்களூரு, கோவை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல சொகுசு ஆம்னி பஸ்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
பொங்கல் சீசனில் மட்டும் சென்னை-கோவை குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் ஒரு டிக்கெட் விலை ரூ.5000 ஆக இருந்துள்ளது. ஆனால் கோவையை தவிர்த்து, மற்ற நகரங்களுக்கு செல்ல பயணிகளின் முதல் தர சாய்ஸ் அரசு பஸ்களாகத் தான் இருந்திருக்கிறது.
குறிப்பாக, திருச்சி மற்றும் மதுரைக்குச் செல்ல பெரும்பான்மையானவர்கள் அரசு பஸ்களையே தேர்வு செய்து பயணித்துள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 35,000 பயணிகள் அரசு பஸ்களை இந்த வழித்தடத்தில் தேர்ந்தெடுத்து உள்ளனர்.
ஒவ்வொரு வார இறுதியிலும் சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு 100க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டதே அதற்கு காரணம் ஆகும். ஆனால், கோவைக்கு இவற்றில் நான்கில் ஒரு பங்கு மக்களே பயணித்துள்ளனர்.
கடந்தாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 70 சதவீதம் பயணிகள் குளிரூட்டப்பட்ட சொகுசு ஆம்னி பஸ்களையே விரும்பி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என்பது கூடுதல் தகவல். சரியான நேரத்தில் பஸ்களை இயக்குவது, பயணிகளை ஏற்றி, இறக்க தோதான இடங்களை தேர்வு செய்ததே இதுபோன்ற பஸ்களை அவர்கள் விரும்ப காரணமாக கூறப்படுகிறது.