கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் சந்திரா ஆர்யா; பார்லியில் கன்னடத்தில் பேசி ஆதரவு திரட்டினார்

11

ஒட்டாவா: கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வட அமெரிக்க நாடான கனடாவில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சொந்த கட்சிக்குள்ளேயே, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த சூழலில், லிபரல் கட்சி தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக சமீபத்தில் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.

பதவியை ராஜினாமா செய்தாலும், அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், அக்கட்சி சார்பில் கனடா பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பதால், கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரா ஆர்யா குதித்துள்ளார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த அவர், அந்நாட்டு பார்லிமென்ட் கூட்டத்தில் தனது தாய்மொழியான கன்னடத்தில் உரை நிகழ்த்தினார்.

அவர் பேசியதாவது: நமது நாடு எதிர்கொண்டிருக்கும் கட்டமைப்பு சவால்களை சரிசெய்ய தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. நமது குழந்தைகள், பேரப்பிள்ளைகளுக்கு உறுதியான அரசியல் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கனடா மக்களுக்கு எது சிறந்ததோ, அந்த விஷயத்திற்காக உழைக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். லிபரல் கட்சியின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தால், என்னுடைய அறிவு மற்றும் அனுபவத்தை கொடுத்து செயல்படுவேன், என்று கூறினார்.

இந்திய வம்சாவளியான சந்திரா ஆர்யா கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், தர்வாடு மாவட்டத்தில் எம்.பி.ஏ., பட்டப்படிப்பு படித்து முடித்தார். அதன்பிறகு, அவர் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.

Advertisement