ஹூண்டாய்- - டி.வி.எஸ்., கூட்டணியில் மின் வாகனம்
புதுடில்லி:புதுடில்லியில் நடந்து வரும் பாரத் மொபிலிட்டி வாகன கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்று, 15க்கும் அதிகமான வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதில், பல நிறுவனங்கள் தங்கள் அறிமுகங்களை காட்சிப்படுத்தின. அவற்றில் பெரும்பாலானவை மின்சார வாகனங்களே.
சீன நிறுவனம், 'பி.ஒய்.டி.,' வியட்நாமை சேர்ந்த, 'வின்பாஸ்ட்' ஆகிய இரு கார் நிறுவனங்கள் தங்கள் கார்களை அறிமுகப்படுத்தின. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, பி.ஒய்.டி.,யின் 'சீலையன் 7' என்ற மின்சார எஸ்.யூ.வி., அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
வின்பாஸ்ட் நிறுவனம், 'வி.எப்., - 6' மற்றும் 'வி.எப்., - 7' கார்களை அறிமுகப்படுத்தி, அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் நுழைந்துள்ளது.
இருசக்கர வாகன பிரிவில், பி.எம்.டபிள்யூ., மோட்டோராட் நிறுவனம், 'எஸ் 1000 ஆர்.ஆர்.,' என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கையும், 'ஆர் 1300 ஜி.எஸ்.,' என்ற ஆப்ரோட் பைக்கையும் அறிமுகம் செய்தது.
முதல் முறையாக, 'ஹூண்டாய்' மற்றும் 'டி.வி.எஸ்.,' நிறுவனங்கள் கூட்டணி சேர்ந்து, மூன்று மற்றும் நான்கு சக்கர முன்மாதிரி வாகனங்களை காட்சிப்படுத்தியது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இதற்கு, 'இ.3.டபிள்யூ.,' மற்றும் 'இ.4.டபிள்யூ.,' என, பெயரிடப்பட்டுள்ளது. நாட்டில் நகரமயம் அதிகரித்து வரும் நிலையில், மிக குறுகலான பகுதிகளில் எளிதாக இயங்கும்படி இந்த வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கடைசி மைல் வணிகம், ஆம்புலன்ஸ், பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து, இ - வணிகம் உள்ளிட்டவை இதன் பயன்பாடு.
கனரக வாகன நிறுவனங்களான, அசோக் லேலாண்ட், ஸ்விட்ச் மொபிலிட்டி, ஜே.பி.எம்., ஆட்டோ, இ.கே.ஏ., மொபிலிட்டி, இ.சு.சூ., - எஸ்.எம்.எல்., ஆகியவை தங்கள் வாகனங்களை காட்சிப்படுத்தின.
இதில், அசோக் லேலண்ட் 'சாத்தி' என்ற இலகு ரக சரக்கு வாகனத்தையும், ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம், 'ஐ.இ.வி., 8' என்ற நடுரக மின்சார சரக்கு வாகனத்தையும் அறிமுகப்படுத்தியது.
மற்றபடி, மின்சார ஸ்டார்ட் அப் நிறுவனங்களான, கோதாவரி எலக்ட்ரிக், நியூமரோஸ் மோட்டார்ஸ், மோட்டோவோல்ட் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்சார வாகனங்களையே அறிமுகப்படுத்தின.
இந்த கண்காட்சி, நாளை முதல் மக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது. மக்கள் எந்த கட்டணமும் இன்றி, வாகன கண்காட்சியை இலவசமாக கண்டு மகிழ வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு வாகன கண்காட்சியில், குறைந்தபட்சம் ௫ லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என நம்பப்படுகிறது.