ஈரான் நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் சுட்டுக்கொலை
டெஹ்ரான்,ஈரான் உச்ச நீதிமன்றத்துக்குள் புகுந்த மர்ம நபர், இரண்டு நீதிபதிகளை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
மேற்காசிய நாடான ஈரானின் தலைநகர் டெஹ்ரானில், அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு நேற்று, பரபரப்பாக வழக்கு விசாரணை அலுவல்கள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது நீதிபதிகளின் அறைக்குள் புகுந்த மர்ம நபர், அங்கிருந்த இரண்டு நீதிபதிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில், அந்த இரண்டு நீதிபதிகளும் உயிரிழந்தனர். நீதிபதியின் அறையில் இருந்த பாதுகாவலரும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தார்.
பின், அங்கிருந்தவர்கள் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றபோது, அவர், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான நீதிபதிகள், முகமது மொகேஷி, அலி ராஜினி என தெரியவந்தது.
இவர்கள் இருவரும், தேசிய பாதுகாப்பு, உளவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிய நீதிபதிகள் என கூறப்படுகிறது.
பல குற்றவாளிகளுக்கு இவர்கள் மரண தண்டனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் தொடர்புடையவர்களில் யாராவது, இருவரையும் சுட்டுக் கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும், இந்த கொலைக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடத்திய நபர் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரானில் கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிக அளவில் மரண தண்டனை வழங்கப்படுகிறது.
இங்கு கடந்த சில ஆண்டுகளில் மட்டும், 5,000 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும், 30,000 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.