ஓஹியோ கவர்னர் பதவிக்கு இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி போட்டி?
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிட இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் சின்சினாட்டியில் தமிழகத்தை சேர்ந்த பெற்றோருக்கு மகனாக பிறந்த விவேக் ராமசாமி,39, ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர். அமெரிக்கா தொழிலதிபர் என்ற அந்தஸ்தில் இருந்து அரசியல்வாதியாக அடியெடுத்து வைத்துள்ளார்.
குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, பிறகு அதில் இருந்து பின்வாங்கினார். அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மிக நெருங்கிய நம்பிக்கைக்குரியவர். டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க்குடன் சேர்ந்து, நிர்வாகத்தை சீர்திருத்தும் பணியை, அவரிடம் டிரம்ப் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில், அவர் ஓஹியோ கவர்னர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் 2026-ல் நடைபெறவுள்ளது.