மாநில நெடுஞ்சாலைகளில் விளம்பர பலகைகளை அகற்றுங்க! அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு
கோவை:'மாநில நெடுஞ்சாலைத் துறை எல்லைக்குள் மற்றும் மையத்தடுப்புகளில் உள்ள விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சாலை சந்திப்புகள் மற்றும் அருகாமையில், எவ்விதத்திலும் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என, கோர்ட் பலமுறை அறிவுறுத்தல் வழங்கிஇருக்கிறது.
நோட்டீஸ்
இதை பின்பற்றி, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் உள்ளாட்சிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனாலும், அனுமதியின்றி ஆங்காங்கே விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. அவற்றை அகற்ற அரசு அதிகாரிகள் முனைப்பு காட்டுவதில்லை.
இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது தொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை செயலருக்கு, 'கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ்' செயலர் கதிர்மதியோன் நோட்டீஸ் அனுப்பினார்.
அந்த நோட்டீசில் அவர் கூறியிருப்பதாவது:
சாலையோரங்களில் விளம்பரம் வைக்க, நெடுஞ்சாலைத்துறை தடையில்லா சான்று வழங்குவதில்லை. ஆனாலும், ஏராளமான இடங்களில் விளம்பரங்கள் அனுமதிக்கப்பட்டு, சட்ட விரோதமாக நிறுவப்பட்டுள்ளன. அரசின் உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றாமல் உள்ளனர்.
வழக்கு?
நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகளில் விளம்பரங்கள் இருந்தாலும், 'எந்த விளம்பரமும் இல்லை' என, பொறுப்பு இல்லாமல், சில அதிகாரிகள் பொய் சொல்கின்றனர். 30 நாட்களுக்குள் விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஐகோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அனுமதி ரத்து
அதில், அரசின் உத்தரவை சுட்டிக்காட்டியிருப்பதோடு, 'விளம்பர பலகைகள் வைக்க எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை.
'நெடுஞ்சாலைத்துறை எல்லை மற்றும் மையத்தடுப்புகளில் விளம்பர பலகைகள் மற்றும் 'ஹோர்டிங்ஸ்'கள் வைக்க அனுமதி கொடுத்திருந்தால் ரத்து செய்ய வேண்டும்; அவற்றை அகற்ற வேண்டும். தமிழக அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார்.