தரம் என்பதே முக்கியம்; 90 மணிநேர வேலைக்கு பாரத்பே சி.இ.ஓ., நளின் நேகி எதிர்ப்பு
புதுடில்லி: பணியிடத்தில் ஊழியர்களின் வேலை நேரத்தை கணக்கிடுவதற்கு பதிலாக, அவர்களின் உற்பத்தித் திறன் மற்றும் சரியான முடிவுகளை எடுக்கும்போது நல்ல பலன்களை நாம் காண முடியும் என்று பாரத்பே சி.இ.ஓ., நளின் நேகி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய மாதங்களில், இன்போசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி மற்றும் ஷாடி.காம் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஷார்க் டேங்க் இந்தியா தலைவர்அனுபம் மிட்டல் உள்ளிட்ட பல இந்திய வணிகத் தலைவர்கள், வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இவர்களின் கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, லார்சன் & டூப்ரோ (எல்&டி) தலைவர் எஸ்.என். சுப்ரமணியன், 'போட்டித்தன்மையைப் பராமரிக்க ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட வாரத்திற்கு 90 மணிநேரம் வரை வேலை செய்ய வேண்டும். நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? அதற்குப் பதில், அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்', என்று கூறினார்.
இவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூட 90 மணிநேர வேலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார். இது பற்றி அவர் கூறுகையில், 'என்னைப் பொறுத்தவரை வேலை செய்யும் நேரத்தைக் காட்டிலும் வேலையின் தரமே முக்கியம். ஒருவர் 48, 40 மணிநேரம் வேலை செய்கிறாரா என்பது முக்கியம் இல்லை. தரமான வேலை செய்கிறாரா என்பதே முக்கியம். எனது மனைவி அற்புதமான நபர். அவரை பார்த்துக் கொண்டே இருப்பதும், அவருடன் நேரத்தைச் செலவிடுவதும் எனக்குப் பிடிக்கும்', எனக் கூறினார்.
இந்த நிலையில், 90 மணிநேர வேலை நேரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத்பே சி.இ.ஓ., நளின் நேகி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: 90 மணிநேரம் வேலை என்பது சாத்தியமில்லாத ஒன்று. என்னைப் பொறுத்தவரையில் தரமே மிகவும் முக்கியம். பணியிடத்தில் ஊழியர்களின் வேலை நேரத்தை கணக்கிடுவதற்கு பதிலாக, அவர்களின் உற்பத்தித் திறன் மற்றும் சரியான முடிவுகளை எடுக்கும்போது நல்ல பலன்களை நாம் காண முடியும். அதிக உற்பத்தி திறன் மற்றும் பணி இடத்தில் உற்சாகமாய் வேலை செய்பவர்களால், தரம் வாய்ந்த அவுட்புட்களை கொடுக்க முடியும்', இவ்வாறு கூறினார்.