வீணை தட்சிணாமூர்த்தி சிலை மீட்கப்பட வேண்டும்: பொன் மாணிக்கவேல் வலியுறுத்தல்!
தென்காசி: அமெரிக்காவில் உள்ள வீணை தட்சிணாமூர்த்தி சிலையை மீட்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சிலை தடுப்பு போலீஸ் முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.
சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், கடந்த 2018ம் ஆண்டு ஓய்வுபெற்றார். இவர், 7 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளை இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வந்தார். பணி ஓய்வு பெற்ற பிறகும், சிலைகளை மீட்கும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள வீணை தட்சிணாமூர்த்தி சிலையை மீட்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பொன்மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார். தென்காசி அருகே பாப்பான்குளம் திருவெண்காடர் கோவிலில் இருந்து திருடப்பட்ட இந்த ஐம்பொன் சிலையின் மதிப்பு ரூ.12 கோடியாகும்.
தற்போது, அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள வீணை தட்சிணாமூர்த்தி சிலையை, ஏலத்தில் இருந்து மீட்டு கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.