பதக்க பட்டியலில் டாப் 10ல் இந்தியா இருக்கணும்: விரிவான திட்டம் தயார் செய்யும் மத்திய அரசு

1

போபால்: அடுத்த பத்தாண்டுகளில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் முதல் பத்து இடங்களுக்குள் இந்தியாவை கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பிட் இந்தியா கிளப் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.


இதில் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: சர்வதேச விளையாட்டு தரவரிசை மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 2036 ஒலிம்பிக்கை நடத்துவதற்கு இந்தியாவை தயார்படுத்தும் ஒரு விரிவான விளையாட்டுத் திட்டத்தை மத்திய அரசு தயார்படுத்தி வருகிறது.

'கேலோ இந்தியா' போன்ற முயற்சிகள் மூலம் இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பது மற்றும் முழுமையான வளர்ச்சிக்காக, 'பிட் இந்தியா கிளப்பை' ஊக்குவிப்பது ஆகியவை இந்த உத்தியில் அடங்கும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் நாட்டின் சர்வதேச விளையாட்டு தரவரிசையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சர்வதேச போட்டிகளில் டாப் 10 பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதே இந்த விரிவான திட்டத்தின் நோக்கம்.

இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டு விழாவிற்குள் உலகளாவிய விளையாட்டு தரவரிசையில் முதல் ஐந்து இடங்களை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மன்சுக் மாண்டவியா பேசினார்.

Advertisement