ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது:'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு பெருமிதம்!
புதுடில்லி: ''நம் நாட்டின் தேர்தல் நடைமுறைகள் குறித்து சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். ஒவ்வொரு முறையும் அந்த சந்தேகம் தவறு என்பதை நம் ஜனநாயகம் நிரூபித்து வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, 'மன் கீ பாத்' எனப்படும் மனதில் குரல் ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே கலந்துரையாடுகிறார்.
அதன்படி, இந்த ஆண்டின் முதல் ரேடியோ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. அதில், அவர் கூறியுள்ளதாவது:
வழக்கமாக கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, இப்போது ஒலிபரப்பாவது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை நமக்கெல்லாம் மிகவும் முக்கியமான நாள்.
நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாட உள்ளோம். அதனால், இந்த நிகழ்ச்சி முன்னதாகவே ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு குடியரசு தினம் நமக்கெல்லாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குடியரசின் 75வது ஆண்டை நாம் கொண்டாட உள்ளோம்.
நம் நாடு குடியரசு அந்தஸ்து பெற்றது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கப்பட்டதன் 75வது ஆண்டைக் கொண்டாடுகிறோம்.
இந்த நேரத்தில், பார்லிமென்டின் நிர்ணய சபையில் பணியாற்றிய அம்பேத்கர், ஜனாதிபதியாக பணியாற்றிய ராஜேந்திர பிரசாத், ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் பங்களிப்பை நினைத்து பார்க்க வேண்டும்.
குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான, ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாகும். இந்த நாளில்தான் நம் தேர்தல் கமிஷன் உருவாக்கப்பட்டது.
தேர்தல் நடைமுறைகளில் தொடர்ந்து மாற்றங்களையும், முன்னேற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செய்து வரும் தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுகள்.
நம் தேர்தல் நடைமுறைகள் குறித்து சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இந்த சந்தேகங்கள் அனைத்தும் தவறு என்பதை நம் ஜனநாயகமும், தேர்தல் கமிஷனும் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. ஏனென்றால், ஜனநாயகத்தின் தாயகம் நம் நாடு தான். இவ்வாறு அவர் பேசினார்.
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடந்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர். நம் நாடு எப்படி ஒற்றுமையாக இருக்கிறது என்ற பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில், இந்த மஹா கும்பமேளா நடந்து வருவது மகிழ்ச்சியை அளக்கிறது.நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை, நாட்டை ஒருமைப்படுத்துவதாகவே உள்ளது. ஒருபக்கம், வடமாநிலங்களில் உள்ள பிரயாக்ராஜ், உஜ்ஜைன், நாசிக், ஹரித்வாரில் கும்பமேளா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதே நேரத்தில் தென் மாநிலங்களில், கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா, காவிரி ஆறுகளில் புஷ்கரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த இரண்டு விழாக்களும், நம் நாட்டின் புனித நதிகளை பாதுகாத்து பராமரிப்பதையும், நம் மத நம்பிக்கையையும் இணைக்கும் வகையில் உள்ளன.இதுபோலவே, கும்பகோணத்தில் இருந்து திருக்கடையூர் வரை, குடவாசலில் இருந்து திருச்சேறை வரை உள்ள பல கோவில்கள், கும்பமேளாவுடன் தொடர்புடையதாக உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் பேசியதாவது:பாரம்பரியம், கலாசாரத்தில் மட்டுமல்ல, அறிவியல், தொழில்நுட்பத்திலும் தமிழகத்தின் சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளியில் உற்பத்தி செய்வது தொடர்பான புதிய தொழில்நுட்பத்தை, சென்னை ஐ.ஐ.டி.,யின் 'எக்ஸ்டெம்' என்ற மையம் உருவாக்கி வருகிறது. அத்துடன், 3டி தொழில்நுட்பத்தில் அச்சடிக்கப்பட்ட கட்டடங்கள், மெட்டல் போம், ஆப்டிக்கல் பைபர் போன்றவற்றை விண்வெளியில் பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடக்கிறது. அதுபோல, தண்ணீர் இல்லாமல் கான்கிரீட் தயாரிப்பது தொடர்பான ஆய்வும் இங்கு நடக்கிறது.எதிர்கால சாதனைகளுக்கான முயற்சிகள் நடப்பது, நமக்கெல்லாம் பூரிப்பை ஏற்படுத்தக் கூடிய விஷயமாகும்.இவ்வாறு அவர் பேசினார்.