திண்டிவனத்தில் பரிதவித்த குழந்தை; தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்பு
திண்டிவனம் : திண்டிவனத்தில் ஆதரவற்று விடப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டு, தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர்.
திண்டிவனம் காமராஜர் சிலை அருகே மாவு மில் படிக்கட்டில் நேற்று காலை 10:00 மணியளவில், ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது.
அதன் அருகில் அந்த குழந்தையின் டிரஸ்கள் இருந்தது. அவ்வழியே சென்றவர்கள், குழந்தையை ஆசுவாசப்படுத்த முயன்றனர்.
ஆனால், குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. வெகுநேரமாகியும், குழந்தையை தேடி யாரும் வராததால் சந்தேகமடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அனைத்து மகளிர் போலீசார், குழந்தையை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் யார், குழந்தையை விட்டு சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், எவ்வித தகவலும் கிடைக்காததை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, அதேகொம் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி ஆகியோர், குழந்தையை விழுப்புரத்தில் உள்ள தொட்டில் குழந்தை திட்ட மேற்பார்வையாளர் புவனேஸ்வரியிடம் நேற்று மாலை ஒப்படைத்தனர்.