ராமேஸ்வரத்தில் தடை விதித்த இரட்டை மடியில் மீன் பிடிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ராமேஸ்வரம்,: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடியில் மீனவர்கள் தாராளமாக மீன்பிடிக்கின்றனர். அதை தடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
கடல் வளம், மீன் வளத்தை அழிக்கக்கூடிய இரட்டை மடி, ரோலர் மடியில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் ஜன., முதல் ஏப்., வரை இரட்டை மடியில் (இரு விசைப்படகுகள் இணைந்து ஒரு வலையில் மீன் பிடிப்பது) மீனவர்கள் மீன்பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் 300க்கும் மேலான விசைப்படகுகளில் மீனவர்கள் தடை செய்த இரட்டை மடியில் மீன்பிடித்து நேற்று காலை ராமேஸ்வரம் கரை திரும்பினார்கள். இதில் 90 சதவீதம் படகுகளில் காரல், சூடை உள்ளிட்ட மீன்கள் டன் கணக்கில் சிக்கின. இலங்கை கடற்படை கெடுபிடியால் சில மாதங்களாக மீன்வரத்து இன்றி வருவாய் இழந்த மீனவர்களுக்கு தற்போது இரட்டை மடியில் சிக்கிய மீன் வரத்தால் மகிழ்ச்சி அடைந்தனர்.
மீன்வளத்துறை அதிகாரிகள் தடுக்காததால் இரட்டை மடி மீன்பிடிப்பு தொடருகிறது. இதனால் மீன்வளம் அழிந்து கடலோரத்தில் மீன்பிடிக்கும் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சிறு தொழில் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.