கண் சிகிச்சை மையத்தில் கண்ணாடிக்கு காத்திருப்பு

சென்னை:முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கொளத்துார், ஜவஹர் நகரில், 2023ல் கண் சிகிச்சை மையத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இம்மருத்துவமனையில் கண் பார்வை திறன் பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்படுவோருக்கு கண்ணாடி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

திங்கள் முதல் சனி வரை காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரையும் சிகிச்சை மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 30 பேர் வரை பரிசோதனைக்கு வருகின்றனர். ஆனால், பரிசோதனை முடிந்தாலும், மூக்கு கண்ணாடி வழங்கப்படுவதில்லை. 'ஆறு மாதத்தில் விழா நடக்கும்; அப்போது வந்து கண்ணாடி வாங்கிக் கொள்ளுங்கள்' என, ஊழியர்கள் அனுப்பி வைக்கின்றனர்.

இங்கு பரிசோதனை செய்து கொண்ட, ஜி.கே.எம்., காலனியை சேர்ந்த ரவிச்சந்திரன், 61 என்பவர் கூறியதாவது:

வெளிச்சத்தை பார்த்தால் கண் கூசுகிறது. அதற்காக இங்கு சிகிச்சை பெற்று, கண்ணாடி வாங்க வந்தேன். பரிசோதனை முடித்து விட்டு, 'கண்ணாடியை ஆறு மாதம் கழித்து வாருங்கள்; விழா நடக்கும் அன்று வாங்கிக் கொள்ளுங்கள்' என்கின்றனர். விழா எப்போது நடக்கும் என்றும் கூறவில்லை. அதுவரை நான் கண்ணாடி போடாமல் அவதிப்பட முடியுமா?.

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கு, வாரத்தில் திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே மருத்துவர்கள் வருகின்றனர்; மற்ற நாட்களில் மருத்துவர் இல்லாததால், சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படுகிறது என்றும், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement