முடிந்தது பொங்கல் விடுமுறை சென்னை திரும்பியவர்கள் திண்டாட்டம்

சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து, சென்னை திரும்பியவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திண்டாடினர்.

சென்னையில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்கள், தொழில், வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக, குடும்பத்துடனும், நண்பர்களுடனும், தனியாகவும் தங்கியுள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி, தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள், அரசு விடுமுறை கிடைத்தது. இதனால், அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், மாணவர்கள் உள்ளிட்ட பலரும், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். பொங்கல் விடுமுறை முடிந்து, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், இன்று முதல் வழக்கம் போல செயல்பட உள்ளன.

வெளியூர் சென்றவர்கள், சென்னை திரும்புவதற்கு வசதியாக, அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள், அதிக அளவில் இயக்கப்பட்டன. கடந்த காலங்களில் கிடைத்த அனுபவத்தால், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் தவிர்க்க, நேற்று காலை முதலே பலரும், சென்னை திரும்ப துவங்கினர். எனினும், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் திணறினர்.

முன்கூட்டியே புறப்பட்டும், குறித்த நேரத்தில் சென்னையை அடைய முடியாமல் பலரும் திண்டாடினர். பல சுங்கச்சாவடிகளில் நேற்று பகலில் துவங்கிய நெரிசல், இன்று அதிகாலை வரை நீடித்தது. சென்னை நுழைவு வாயிலான பெருங்களத்துாரில், இரண்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் செல்வதற்கு வசதியாக பல சுங்கச்சாவடிகளில் கூடுதல் வழிகள் ஏற்படுத்தப்பட்டன. அதிகப்படியான வாகனங்களால், அத்திட்டம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

Advertisement