கோவையில் ஒருநாள் சுற்றுலா திட்டம்; அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

கோவை: கோவை குற்றாலம் பகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். இதற்காக, நானும், கலெக்டரும் ஆய்வு செய்தோம். பொருட்களை வைக்கவும், உடை மாற்றவும் தனித்தனி அறைகளும், கழிவறைகளும் தேவை என்று கேட்டுள்ளனர்.

அதேபோல, சாகச விளையாட்டுகள், பைக் பார்க்கிங் வசதிகள் தேவை என்று கோரிக்கை வைத்துள்ளனர். நுழைவுச் சீட்டு கொடுக்கும் இடம் புனரமைக்க வேண்டும் என்றும், ஓய்வறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை செய்து கொடுப்பதற்காக, சுற்றுலாத்துறையின் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் ஆய்வு செய்தோம். அதன்பிறகு, கோவை குற்றாலத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி கோவில், காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளோம்.சுற்றுலா மையங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை செய்து கொடுப்பதற்காக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. கோவையில், பல சுற்றுலா தலங்களை ஒருங்கிணைத்து ஒரு நாள் சுற்றுலாவை உருவாக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

சூழல் சுற்றுலாத்துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு விவகாரம் வனத்துறை சம்பந்தப்பட்டது. இதுவரையில் ரூ.9 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement