சுமந்து சென்றது சீர் அல்ல பாசம்..
81 வயதில் தனது மகளுக்கு சீர் கொடுக்க செருப்பு கூட போடாத கால்களுடன் 17 கிலோமீட்டர் துாரம் சைக்கிளில் சென்று கொடுத்த பாசக்கதை இது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்லத்துரை(81)
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து மொத்த விலைக்கு காய்கறி,கீரை வாங்கிக் கொண்டு பின்னர் தனது சைக்கிளிலேயே சென்று வாடிக்கையாளர்களுக்கு சில்லரை விலைக்கு கொடுத்து அதில் வரும் வருமானத்தில் வாழ்பவர்.
இவருக்கு தீபாவளி பொங்கல் புதுவருடம் என்ற விடுமுறை எல்லாம் கிடையாது எல்லா நாளும் வேலை நாளே அன்றாடம் உழைத்தால்தான் பிழைப்பே.
கால்களில் செருப்பு போடமாட்டார்,ஒரு நாளைக்கு மதியம் இரவு என்று இரண்டு வேளை உணவுதான், இந்த இரண்டு வேளையும் மோரும் சோறும் போதும்.
மொபைல் போன் கிடையாது சொந்தமாக ஒரு சைக்கிள் வைத்துள்ளார் அந்த சைக்கிளுக்கும் நாற்பது வயதாகிவிட்டது.
இவருக்கு அமிர்தவள்ளி என்ற மனைவியும் சுந்தாரம்பாள் என்ற மகளும் உண்டு.மகளை 17 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள நம்பம்பட்டியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
திருமாகிச்சென்ற மகளுக்கு எத்தனை ஆண்டுகளானாலும் அவரவர் சக்திக்கேற்ப பொங்கல் பண்டிகையின் போது சீர் கொண்டு போய் கொடுப்பது இந்த பகுதி மக்களின் பழக்கம்.
அன்றாடம் காய்கறி கீரை விற்று வரும் வருமானத்தில் ஒரு சிறிய பங்கை மகளின் சீர் செலவிற்காக செல்லத்துரை ஒதுக்கிவைத்துவிடுவார்.
அந்தப்பணத்தில் வேட்டி,துண்டு,சேலை,பொங்கல் வைக்க தேவையான அரசி,வெல்லம்,மஞ்சள் கொத்து போன்ற பொருட்களை வாங்கிக் கொண்டு போய் பொங்கல் பண்டிகைக்கு முந்திய நாளான்று பொங்கல் சீராக கொண்டு போய் கொடுப்பார்.
தனது சைக்கிளில் எல்லாபொருட்களையும் கட்டிக்கொண்டு தலையில் கரும்பு கட்டை வைத்துக் கொண்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார் என்றால் இரண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு நேராக மகள் வீட்டில்போய்தான் நிற்பார்.
இப்படி 81 வயதில், செருப்பு போடாத கால்களுடன் 17 கிலோமீட்டர் துாரம் சைக்களில் சென்று இவர் பொங்கல் சீர் கொடுப்பதுதான் பலரது மனதைத்தொட்ட விஷயமாகும்.
உங்கள் மனதையும் தொட்டிருக்குமே..
-எல்.முருகராஜ்.