நடிகர் விஜயை பரந்தூருக்கு வர வைத்த சிறுவன் ராகுல்!

8

காஞ்சிபுரம்; சிறுவன் ராகுலின் பேச்சால் பரந்தூர் போராட்டக் களத்துக்கு நடிகர் விஜய் வந்துள்ள நிலையில் சிறுவன் ராகுல் பேசிய வீடியோ வைரலாகி உள்ளது.



நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் இன்று (ஜன.20) பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை சந்தித்தார். போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், தமிழக அரசை விமர்சித்தும் பேசினார்.


தனது பேச்சில், போராட்டக்களத்துக்கு தம்மை வரவழைத்த விஷயம் எது என்று நடிகர் விஜய் விளக்கமாக கூறினார். அதில், சிறுவன் ராகுல் பேசிய வீடியோ ஒன்றை பார்த்த பின்னரே இங்கு வந்து உங்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது என்று தெரிவித்து இருந்தார்.


இதையடுத்து யார் அந்த சிறுவன், என்ன பேசினார் என்பதை இணையவாசிகள் தேட ஆரம்பித்தனர். சிறுவன் ராகுல் மழலை மொழியில் பேசியது இதுதான்;


எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். விவசாய நிலங்களை விட்டால் போதும். இந்த ஏரிகளை விட்டால் போதும், பள்ளிக்கூடங்களை விட்டால் போதும்.


எங்களுக்கு விமான நிலையம் வந்து நாங்க என்ன மேலேயே பறக்க போகிறோம். எங்களுக்கு படிக்கிற பள்ளி பாதிப்பாகிறது. அவங்க பசங்க எல்லாம் படிச்சு பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறாங்க. நாங்க ஆக வேண்டியதில்லையா?


விவசாய நிலம் இருந்தா தானே நாங்க சாப்பிட முடியும், எதை வச்சு நாங்க சாப்பிட முடியும். ஏரி எல்லாம் இருந்தா நாங்க குளிப்போம். வெயில் டைமில் எங்களுக்கு இந்த ஏரி தேவைப்படும். அதை அழிச்சா நாங்க எங்க போவோம்?


விமான நிலையம் வேண்டாம், ஊரை விட்டா போதும், எங்க பள்ளியை விட்டா போதும். நாங்க எல்லாம் படிக்க தேவையில்லையா?


இவ்வாறு சிறுவன் ராகுல் வீடியோவில் பேசி இருக்கிறார்.


விஜய் பேசியதை தொடர்ந்து, அவரது கட்சியினர் இந்த வீடியோவை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

Advertisement