கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் கொலை வழக்கு; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

38

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்த பயிற்சி பெண் டாக்டர், கடந்தாண்டு ஆக., 9ல் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். மருத்துவ கல்லுாரி கருத்தரங்கு அறையில் நடந்த இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.



இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியும், ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் உட்பட, நாடு முழுதும் பயிற்சி டாக்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.


பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து, முகத்தை மூடி மூச்சு திணறடித்து கொலை செய்தது ஆகியவை சி.பி.ஐ.,யால் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த சம்பவத்தில், சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இன்று (ஜன.,20) வழக்கு விசாரணைக்கு வந்தது.



அப்போது, நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் கூறியதாவது: எந்த காரணமும் இல்லாமல் நான் கைது செய்யப்பட்டேன். நான் எப்பொழுதும் ருத்ராட்ச சங்கிலியை அணிவேன் என்று முன்பே சொன்னேன். நான் குற்றம் செய்திருந்தால், அது குற்றம் நடந்த இடத்தில் உடைந்திருக்கும். என்னை பேச அனுமதிக்கவில்லை. பல பேப்பர்களில் என்னைக் கட்டாயப்படுத்தி கையெழுத்துப் போட வைத்தார்கள். எனக்கு பேச வாய்ப்பு தரவில்லை. இதையெல்லாம் பார்த்திருக்கீங்க சார். நானும் முன்பே சொன்னேன். இவ்வாறு அவர் பேசினார்.


இதற்கு பதில் அளித்து, நீதிபதி கூறியதாவது: என்னுடன் பேசுவதற்கு கிட்டத்தட்ட அரை நாள் அவகாசம் கொடுத்தேன். நான் மூன்று மணி நேரம் உங்கள் பேச்சைக் கேட்டேன். என் முன் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சாட்சியங்கள், ஆவணங்கள் அனைத்தையும், விசாரித்து, இவற்றின் அடிப்படையில், நான் உங்களை குற்றவாளி என்று கண்டேன். நீங்கள் ஏற்கனவே குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டீர்கள். இப்போது, ​​தண்டனையைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கேட்க விரும்புகிறேன். உங்கள் குடும்பத்தில் யார் இருக்கிறார்கள்? அவர்கள் உங்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா?. இவ்வாறு நீதிபதி கூறினார்.


அவரது குடும்பத்தைப் பற்றிய கேள்விக்கு, 'இல்லை சார். நான் சிறையில் இருக்கிறேன். அவர்கள் என்னைப் பார்க்கவே இல்லை' என சஞ்சய் ராய் பதில் அளித்தார். இதற்கிடையே, சி.பி.ஐ., வழக்கறிஞர் கூறியதாவது: 'குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். இது அரிதான வழக்கு. இந்த சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியது. பெற்றோர்கள் தங்கள் மகளை இழந்துள்ளனர்.


டாக்டர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்றால், என்ன சொல்ல முடியும்? மரண தண்டனையால் மட்டுமே சமூகத்தில் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும். மக்களின் நம்பிக்கையை நீதிமன்றம் மீட்டெடுக்க வேண்டும், என்றார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு, மதியம் 2.45 மணி மேல் நீதிபதி தண்டனை அறிவித்தார். சஞ்சய் ராய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே, குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement