யு.ஜி.சி. வெளியிட்ட நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்; மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை; யு.ஜி.சி., வெளியிட்ட நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதி உள்ளார்.



அவர் எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு;


'பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (யு.ஜி.சி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து கவலையளிக்கிறது. வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன என்பதைத் குறிப்பிட விரும்புகிறேன். துணைவேந்தர்களை நியமிப்பதற்கான முன் மொழியப்பட்ட அளவுகோல்கள், தொழில்துறை, பொது நிர்வாகம் அல்லது பொதுக் கொள்கையில் அனுபவம் வாய்ந்த நபர்களை உள்ளடக்கியது மிகுந்த கவலைகளை எழுப்புகிறது.


கல்வித்துறைக்கு வெளியே தலைமைப் பதவிகளில் அனுபவம் மிக்கவர்களாக இருப்பினும், துணைவேந்தர் பதவிக்கு ஆழ்ந்த கல்வி நிபுணத்துவம் மற்றும் உயர் கல்வி முறை பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள அளவு கோல்கள் பல்கலைக்கழகங்களை திறம்பட வழிநடத்த தேவையான கல்வி மற்றும் நிர்வாக அனுபவம் இல்லாத நபர்களை நியமிக்க வழிவகுக்கும் என்று அஞ்சுகிறோம்.


கல்வி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தில் அனுபவம் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநில பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைப்பை மாநில அரசுகள் முழுமையாக ஏற்படுத்தியுள்ளன.


இப்பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளால் முழுமையாக நிதியுதவி அளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. மாநிலத்தின் உண்மையான விருப்பங்கள், உள்ளூர் மாணவர்களின் கல்வித் தேவைகள், மாநில கொள்கைகள் ஆகியவை உரிய முறையில் பின்பற்றி உறுதி செய்வதற்கு, துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் மாநில அரசின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது.


வரைவு விதிமுறைகளில் இதுபோன்ற பல விதிகள் மாநில பல்கலைக் கழகங்களின் கல்வி ஒருமைப்பாடு, தன்னாட்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, கல்வி அமைச்சகம் விவாதத்தில் உள்ள வரைவு மசோதாக்களை திரும்பப் பெறவும், இந்தியாவில் உள்ள மாறுபட்ட உயர்கல்வி தேவைகளுடன் சிறப்பாக ஒத்துப் போகும் வகையில் வரைவு விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


எனவே, வரைவு நெறிமுறைகள் திரும்பப்பெறப்பட்டு, மாநிலங்களின், குறிப்பாக தமிழகத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படுவதை உறுதி செய்வதற்கு மத்திய கல்வி அமைச்சரின் ஆதரவை எதிர்பார்த்து, இந்த வரைவு விதிமுறைகளை எதிர்த்தும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விதிமுறைகள் உட்பட மேற்கண்ட இரண்டு வரைவு விதிமுறைகளையும் உடனடியாக திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் 09.01.2025 அன்று தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அத்தீர்மானத்தின் நகல் ஒன்றினையும் மத்திய கல்வி அமைச்சரின் கனிவான பரிசீலனைக்காகவும், சாதகமான நடவடிக்கைக்காகவும் அனுப்பி வைத்துள்ளேன்.


இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

Advertisement