புழல் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை
சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், புழல் சிறையில் இருந்து இன்று ஜாமினில் விடுதலையானார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் மீது அவதுாறு பரப்பியதாக கடந்தாண்டு தமிழகத்தின் வெவ்வேறு ஸ்டேஷன்களில் வழக்குகள் பதியப்பட்டன. குண்டர் சட்டமும் அவர் மீது பாய்ந்தது. ஒரு முறை குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு முறை குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
இத்தகைய பின்னணியில், அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. குண்டர் சட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு விசாரிக்கும் வழக்கு குறித்து, தவறான தகவல்களை பரப்பியதாக அளித்த புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சவுக்கு சங்கரை டிச.,24ல் கைது செய்தனர்.
அவரது ஜாமின் மனுக்கள் கீழமை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் ஜாமின் கோரிய மனு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, ஜன.,17ம் தேதியன்று ஜாமின் வழங்கியதுடன், போலீசாருக்கு கண்டனமும் தெரிவித்தார்.
அவரது தீர்ப்பில், 'ஜனநாயகம் என்பது முழுக்க முழுக்க கருத்துக்கள் அடங்கியது. அவற்றில் உள்ளடக்கம் உள்ளவை மட்டுமே நிலைத்து நிற்கும். ஒரு கருத்து ஆதாரமற்றதாக இருந்தால், அது நீண்ட காலத்திற்கு நீடிக்காது. ஒரு கருத்தை சொன்னதற்காக, ஒருவர் மீது வழக்கு தொடுப்பது, பாசிச அணுகுமுறையாகும்.'வழக்கு தொடுப்பது வேறு; கைது செய்வது வேறு என்பதை, உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெரிவித்துள்ளது. காவல் துறையினர் தேவையற்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது' என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோர்ட்டில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பித்தல் தொடர்பான தொழில்நுட்ப ரீதியான காரணங்களால், அவரது விடுதலை தாமதம் ஆனது.
இதையடுத்து இன்று ஜாமின் உத்தரவில் மாறுதல் செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். 'இந்த உத்தரவு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட உடன், சிறை அதிகாரிகள் மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும். சான்றளிக்கப்பட்ட நகலின் வருகைக்காக காத்திருக்க தேவையில்லை' என்று நீதிபதி உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில், இன்று மாலை சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார்.