கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதற்கான ஆதாரம் இருக்கிறது; ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி உறுதி
சென்னை: கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது, அதற்கான ஆதாரமும் உள்ளது என்று சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறி உள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது; கோமியத்தில் விஞ்ஞான பூர்வமாக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? நான் ஒரு 5 ஆராய்ச்சிக் கட்டுரைகளை உங்களுக்கு (செய்தியாளர்களுக்கு) தருகிறேன்.
இந்த 5 ஆராய்ச்சிக் கட்டுரைகளும் அமெரிக்காவில் வெளியானது. நேச்சர் (nature) என்ற முன்னணி அறிவியல் இதழில் ஆராய்ச்சி கட்டுரையாக வந்துள்ளது. அது தொடர்பான அமெரிக்க காப்புரிமை பற்றிய விவரங்களையும் தருகிறேன். இதைத்தான் நான் அன்றைய நிகழ்ச்சியில் கூறினேன்.
கோமியத்தில் ஆன்டிபங்கல், ஆன்டி இன்ப்ளாமேட்டிவ் பாக்டீரியா இருப்பதாக நான் சொன்ன விஷயங்கள் இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியாக நிரூபித்து உள்ளனர். இதையே தான் அன்றும் நான் சொன்னேன்.
எல்லாரும் அதை படித்துக் கொள்ளுங்கள். மிகவும் எளிதான மொழியில் தான் இருக்கும். ஆராய்ச்சிக் கட்டுரைகளில் வெளியான முடிவுகள் தான் அந்த ஆதாரம். பரிசோதனை செய்துள்ளனர், நிரூபித்துள்ளனர். காப்புரிமையும் பெற்றுள்ளனர். அதுதான் விஞ்ஞானப்பூர்வ ஆதாரம்.
கோமியம் ஆபத்தானது என்பது பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியானதாக சமூக வலைதளங்களில் வருகின்றன. எனக்கு அவை பற்றி தெரியாது. ஆனால் நான் குறிப்பிடும் அமெரிக்காவின் நேச்சர் இதழில் வந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் ஆதாரம் இருக்கிறது. இந்த கட்டுரையில் நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளனர் என்பதையும் கூறி உள்ளனர்.
வேற கண்டுபிடிப்புகளும் இருக்கலாம், ஆனால் நான் குறிப்பிடும் இந்த விஷயங்கள் அதில் உள்ளன என்பது தெளிவாக இருக்கிறது. இப்போது தான் இந்த விஷயம் பற்றி நிறைய ஆர்வம் இருப்பது தெரிகிறது. இவ்வளவு பேர் இன்று இதை பற்றி பேசுகிறோம். இண்டியன் ஸ்கூல் ஆப் மெடிசன் இது குறித்தும் ஆய்வு செய்து தெரிவிக்கலாம்.
சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள மெடிக்கல் சயின்ஸ் துறையில் விருப்பம் உள்ளவர்கள் இதை பற்றி ஆராய்ச்சி செய்யலாம். எங்களுக்கு சில பண்டிகைகள் வரும் போது நாங்கள் பஞ்சகவ்யம் சாப்பிடுகிறோம். நான் நிச்சயமாக பஞ்சகவ்யம் சாப்பிடுவேன்.
இவ்வாறு காமகோடி கூறினார்.