மத்திய அரசின் மானிய உரம் பறிமுதல்; தி.மு.க., நிர்வாகி உட்பட 2 பேர் கைது
துாத்துக்குடி,: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி திட்டங்குளத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. அங்குள்ள ஒரு கிடங்கில், யூரியா உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி., தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 630 யூரியா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
தலா 45 கிலோ எடை கொண்ட அந்த மூட்டைகளில் மொத்தம், 28,350 கிலோ யூரியா இருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிசெல்வம், 58, தி.மு.க., ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், 35, ஜோதிநகரை சேர்ந்த கணேசன், 52, ஆகியோர் மீது கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்களில் ராஜ்குமாரும், கணேசனும் கைது செய்யப்பட்டனர்.
விவசாயிகள் சிலர் கூறியதாவது:
மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் உரங்களை கூட்டுறவு வேளாண் சங்கங்கள் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகே பெற முடியும். 46 கிலோ கொண்ட ஒரு மூட்டை யூரியாவின் விலை 266 ரூபாய்.
ஆனால், ஆளுங்கட்சி பிரமுகர்களும், அதிகாரிகளும் இணைந்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உர மூட்டைகளை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு கூறினர்.