2026ல் எதிர்க்கட்சியாக கூட தி.மு.க., வர முடியாது: செங்கோட்டையன் ஆருடம்
கடலுார்; ''தி.மு.க., 2026 சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட வர முடியாது'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
கடலுாரில் அ.தி.மு.க., சார்பில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான செங்கோட்டையன் பேசியதாவது:
அரசியலிலும் வரலாறு படைத்தவர் எம்.ஜி.ஆர்., திராவிட இயக்கங்கள் வேரூன்ற காரணமானவர். தி.மு.க.,வினர் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்று கூறுகின்றனர். ஆனால், எதிர்கட்சியாக கூட வர முடியாது.
அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர்., தி.மு.க., ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பில் ஏன் பணம் வழங்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் தொலைநோக்கு சிந்தனை இல்லை.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெ., மற்றும் பழனிசாமி ஆகியோர் மக்களுக்காக சிறந்த வளர்ச்சி பணிகளை கொண்டு வந்தனர். பெண்களுக்கு தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி என பல திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினர். ஆனால், செய்ய முடியவில்லை.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கி்ல் 'யார்' அந்த சார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தி.மு.க.,வினருக்கு தைரியம் இல்லை. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.