பனாமா கால்வாய் வேணும்; அடம் பிடிக்கிறார் டிரம்ப்; அடுத்து என்ன நடக்குமோ!

2


வாஷிங்டன்: 'சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள பனாமா கால்வாய், அமெரிக்கா வசம் வரப்போகிறது' என பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

பனாமா என்பது மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று. இந்த நாட்டின் வழியாக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்க்கு பனாமா கால்வாய் என்று பெயர். கப்பல்கள், தென் அமெரிக்காவின் கடைக்கோடி முனையை சுற்றிக்கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டதே இந்த கால்வாய். இது, ஒரு முனையில் அட்லாண்டிக் பெருங்கடலையும், மற்றொரு முனையில் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது.



சுமார் 82 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தக் கால்வாயை, 1914ல் பெரும் பொருட்செலவில், பல்லாயிரம் தொழிலாளர்கள் உழைப்பில் அமெரிக்கா உருவாக்கியது. தொடர்ந்து அதை நிர்வகித்தும் வந்தது. இந்தக் கால்வாய் திறக்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆகின்றன. கால்வாய் அமெரிக்காவின் வசம் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனாமாவில் பல ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்தன.


அந்த நாட்டு அரசும், தங்களிடம் கால்வாயை ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தியது. இதன் விளைவாக இரு நாடுகளும் 1977ல் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன.
அதன் அடிப்படையில், கால்வாய் 1999ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி பனாமா வசம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் பனாமா நாட்டு அரசுதான் இந்த கால்வாயை நிர்வகிக்கிறது.


ஒவ்வொரு ஆண்டும் 14 ஆயிரம் கப்பல்கள் இந்த பனாமா கால்வாய் வழியாகச் செல்கின்றன. அமெரிக்காவின் கப்பல்களில் சுமார் 75 சதவீதம், பனாமா கால்வாய் வழியாகதான் சென்று வருகின்றன.


இதற்காக பனாமா பெரும் கட்டணத்தை அமெரிக்காவிடம் வசூலிக்கிறது; அமெரிக்க கடற்படை கப்பல்கள் இடம் கூட கட்டணம் வசூலிக்கின்றனர் என்பது தான் டொனால்டு டிரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால், சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள பனாமா கால்வாய், அமெரிக்கா வசம் வரப்போகிறது என பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:
பனாமா கால்வாய் நிர்வாக உரிமையை பனாமா நாட்டிற்கு, அமெரிக்கா வழங்கியது ஒரு முட்டாள் தனம். பனாமா கால்வாயை சீனா இயக்குகிறது. அதை சீனாவிடம் நாங்கள் கொடுக்கவில்லை. சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள பனாமா கால்வாய், அமெரிக்கா வசம் வரப்போகிறது. பனாமா கால்வாய்க்கான கட்டணத்தை குறைக்க வேண்டும். முடியாவிட்டால் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



இதற்கு பதில் அளித்து, பனாமா அதிபர் கூறுகையில், ' பனாமா கால்வாய் சீனாவுக்கானது அல்ல. இந்த கால்வாய் மீது சீனா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. உலகில் உள்ள எந்த நாடும் எங்கள் நிர்வாகத்தில் தலையிடவில்லை, என்றார். கால்வாய், சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.



அதை பனாமா அரசு மறுத்துள்ளது. உண்மையில், இந்த கால்வாயில் இரு முனைகளிலும் அமைந்துள்ள துறைமுகங்களை, ஹாங்காங்கை சேர்ந்த தனியார் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இதைத்தான் சீனாவின் ஆதிக்கம் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement