ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் விறுவிறு!
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கட்சி முடிவை மீறி சுயேச்சையாக மனு தாக்கல் செய்ததற்காக அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன், தி.மு.க.,வில் இணைந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகள் புறக்கணித்துவிட்டதால் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.
வேட்பு மனு பரிசீலனை, வாபஸ் என தேர்தல்கால நடவடிக்கைகள் நேற்று (ஜன.20) முடிய, 46 பேர் கொண்ட இறுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது. தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்களும் மும்முரமாய் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணை செயலாளர் செந்தில் முருகன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து அவரை கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அதிரடியாக நீக்கினார்.
இந் நிலையில், அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் அவர் தம்மை தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டார்.