ஷாம்பு தயாரிக்கும் மூலப்பொருள் திருட்டு: 5 பேர் மீது வழக்கு
வில்லியனுார்; புதுச்சேரி, வில்லியனுார் அடுத்து வடமங்கலம் கிராமத்தில் இந்துஸ்தான் யுனிலீவர் சோப்பு தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலைக்கு மூலப் பொருட்களை, கடந்த 17ம் தேதி புனேவை சேர்ந்த சாந்தராம் கொண்டல்கர் என்பவர் டேங்கர் லாரியில் ஏற்றி வந்துள்ளார். லாரியில் இருந்து மூலப்பொருட்களை இறக்கிய பிறகு, அதை சரிபார்த்தனர். அதில் அளவு குறைந்து இருந்தது. புகாரின்பேரில் வில்லியனுார் போலீசார் லாரி டிரைவர் சாந்தராம் கொண்டல்கரிடம் விசாரித்தனர்.
கம்பெனியில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும், பொறையூர் சண்முகா வி.ஐ.பி. சிட்டியை சேர்ந்த சிவபாதம், வில்லியனுார் அன்னை நகரை சேர்ந்த சதாசிவம், கண்டமங்கலம் அடுத்த நவமால் மருதுார் இளம்வழுதி, பூஞ்சோலைகுப்பத்தை சேர்ந்த முருகன் ஆகியோர், டிரைவரிடம் ரூ. 10 ஆயிரம் கொடுத்து, ஷாம்பு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை திருடியது விசாரணையில் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து லாரி டிரைவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.