ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட முயற்சி
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டை பிடிக்க அதிகாரிகள் சாக்கு தராததை கண்டித்து விவசாயிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
திருவெண்ணெய்நல்லுாரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கடந்த 50 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. தற்போது சம்பா அறுவடை பணி துவங்கியுள்ளதால், கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது.
நெல் மூட்டை பிடிப்பதற்காக விவசாயிகள் நேற்று கமிட்டி ஊழியர்களிடம் சாக்கு கேட்டனர்.
அதற்கு அவர்கள், கடந்த 10 ஆண்டாக சாக்கு இல்லை. வியாபாரிகள் கொண்டு வந்தால் தான் கொடுக்க முடியும் என்றனர்.
ஆத்திரமடைந்த விவசாயிகள், வியாபாரிகள் வந்து சாக்கு கொடுக்கும் வரை எங்கள் நெல் மழையில் நனைய வேண்டுமா எனக் கேட்டு, கமிட்டி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து, கமிட்டியை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை கமிட்டி அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.