30 ஆண்டுக்கு முன் காணாமல் போனவர்; 80 வயதில் குடும்பத்துடன் இணைந்து நெகிழ்ச்சி

1

தானே: மஹாரஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் 30 ஆண்டுக்கு முன் காணாமல் போன பெண், 80 வயதில் மீண்டும் தன் குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து தானே மனநல மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நேதாஜி முலிக் கூறியதாவது:

மஹாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் 30 ஆண்டுக்கு முன் தனது வீட்டிலிருந்து காணாமல் போன பெண், மருத்துவமனை ஊழியர்களின் முயற்சியால், 80 வயதில் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.

30 ஆண்டுகளுக்கு முன், அந்தப் பெண்ணின் 13 வயது மகன் புளிய மரத்தில் ஏறியுள்ளான். மரத்தின் அருகே செல்லும் மின்கம்பிகள் உரசியதில் அவன் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் அவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டான். மகன் இறந்த துக்கம் தாங்காமல் துயரத்தில் மூழ்கி, அந்த பெண் தனது வீட்டை விட்டு வெளியேறி எங்கெங்கோ சென்றுள்ளார்.

பின்னர் அந்தப் பெண் நாசிக் சென்றடைந்தார். அங்கு அவர் பல ஆண்டுகளாக பஞ்சவதி பகுதியில் அலைந்து திரிந்தார்.

இரண்டு ஆண்டுக்கு முன், நாசிக் காவல்துறையினர் அவரை மோசமான உடல் மற்றும் மன நிலையில் கண்டுபிடித்தனர்.

அவருக்கு ஞாபக மறதி இருப்பதை உணர்ந்த பிறகு, பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்காக தானே மனநல மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

மருத்துவமனையில், மருத்துவக் குழு அவருக்கு விரிவான சிகிச்சை அளித்தது. அவர் நல்ல முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காட்டியதும், அவரது அடையாளத்தை கண்டுபிடிக்கவும், அவரது குடும்பத்தைக் கண்டறியவும் குழு செயல்பட்டது.

பெண்ணின் கடந்த கால நினைவுகள் தெளிவற்றதாக இருந்தது.
ஆரம்பத்தில் அதிக வெற்றி பெறவில்லை என்றாலும், மருத்துவமனை ஊழியர்கள் படிப்படியாக அவரது சொந்த ஊரைப் பற்றிய தகவல்களை சேகரித்து, இங்கிருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள அகமதுநகரில் உள்ள காவல்துறையைத் தொடர்பு கொண்டு, அவரது உறவினர்களைக் கண்டுபிடித்தோம்.

தகவல் கிடைத்த பிறகு, அவரது மருமகள், மருமகன்கள் மற்றும் உறவினர்கள் உட்பட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் ஜனவரி 17 அன்று இங்குள்ள மருத்துவமனைக்கு வந்து 30 ஆண்டுகளில் முதல் முறையாக அவரைச் சந்தித்தனர்.

அதனை தொடர்ந்து குடும்பத்தினர் அந்த 80 வயது மூதாட்டியை மீண்டும் அகமதுநகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குடும்பத்தை மீண்டும் ஒன்றாகப் பார்ப்பது எங்களுக்கு மிகப்பெரிய வெகுமதி.

இவ்வாறு நேதாஜி முலிக் கூறினார்.

குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில்,மருத்துவக் குழுவின் அசாதாரண கவனிப்பு மற்றும் அர்ப்பணிப்பால் நாங்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளோம் என்றனர்.

Advertisement