தமிழகத்தில் டங்ஸ்டன் திட்டம் வராது; நாளை அறிவிப்பு வெளிவரும்: அண்ணாமலை

3


புதுடில்லி: டங்ஸ்டன சுரங்கத் திட்டத்தை கைவிடுமாறு டில்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்த போராட்டக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 'நாளை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்', என்று தெரிவித்தார்.


மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் பா.ஜ., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.,வின் மாநில தலைவர் அண்ணாமலை, கண்டிப்பாக டங்ஸ்டன் சுரங்கம் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக கூறினார். இதன் ஒரு பகுதியாக, டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்குழுவினருடன் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டில்லி சென்றுள்ளனர்.

இது குறித்து நேற்று (ஜன.,21) பேசிய அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க இருப்பதாகவும், நாளை (இன்று) மகிழ்ச்சியான செய்தி வரும் என்று கூறினார்.

இந்த நிலையில், மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை அண்ணாமலை தலைமையிலான போராட்டக்குழுவினர் டில்லியில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.



மத்திய அமைச்சருடனான சந்திப்பிற்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது: 2021ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, அரிட்டாபட்டியில் தான் டங்ஸ்டன் இருப்பது தெரிய வந்திருக்கிறது. எந்த சுரங்கத்தினாலும் மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் வரப்போவதில்லை. மாவட்டத்திற்கு டி.எம்.எப்., எனப்படும் கனிம நிதி மட்டும் கிடைக்கும்.


பிரதமர் மோடி மக்களின் நண்பனாகத் தான் இருந்துள்ளார். நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஒரு அரசியல் கட்சியை குறை சொல்ல விரும்பவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசிடம் கேட்டது. அதற்கு அவர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அனுமதி கொடுத்தார்கள்.


பிரதமர் மோடி, விவசாயிகள் மற்றும் தமிழக மக்களுடன் நிற்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். டங்ஸ்டன் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரதமரை சந்திக்க வேண்டும் என்பதால் தான், நாளை அறிவிப்பு வரும் என்று கூறினேன். தமிழகத்தில் டங்ஸ்டன் திட்டம் வராது. 4,981 ஏக்கரில் சுரங்கம் வராது என்று மக்களுக்கு உறுதிமொழி கொடுத்ததை பா.ஜ., காப்பாற்றியுள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement