மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு நிம்மதி; தகவல்களை பகிர்வதற்கான தடை நீக்கம்

புதுடில்லி: மெட்டா மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறுவதற்கு ஐந்தாண்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை, தீர்ப்பாயம் நீக்கி உள்ளது.

உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட பலவற்றை இயக்கி வருகிறது. இந்தியாவில் பேஸ்புக் சமூக வலைதளத்தை 35 கோடி பேரும், வாட்ஸ் அப் செயலியை 50 கோடி பேரும் பயன்படுத்துகின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கையை புதுப்பித்தது. இதன் மூலம் வாட்ஸ் அப் பயனர்களின் தரவுகளை மெட்டாவின் மற்ற செயலிகளுக்கு விளம்பர நோக்கங்களுக்காக பகிர்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்த புகாரை விசாரித்த இந்திய போட்டி ஆணையம்(The Competition Commission of India(CCI)), கடந்த ஆண்டு நவ., மாதம் தகவல்களை பரிமாற மெட்டா நிறுவனத்திற்கு தடை விதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மெட்டா நிறுவனம், இந்த விவகாரத்தில் சி.சி.ஐ.,யிடம் தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடையாது. இது செயலியில் சில வசதிகளை அறிமுகப்படுத்த முடியாது எனக்கூறியது.

சி.சி.ஐ.,யின் உத்தரவை எதிர்த்து, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில்(என்சிஎல்டி) மெட்டா நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த என்சிஎல்டி, சி.சி.ஐ.,யின் உத்தரவிற்கு தடை விதித்ததுடன், வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் எனக்கூறியுள்ளது. இந்த தடையால் வாட்ஸ் அப்பின் வணிக உத்திகள் சீர்குலைந்துவிடும் எனத்தெரிவித்து உள்ளது.
இந்த உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்து உள்ள மெட்டா நிறுவனம், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளது.

Advertisement