டங்ஸ்டன் கனிம சுரங்கம் ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
புதுடில்லி: மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
தீர்மானம்
மேலும், மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.,வின் மாநில தலைவர் அண்ணாமலை, கண்டிப்பாக டங்ஸ்டன் சுரங்கம் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக கூறினார். இதன் ஒரு பகுதியாக, டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்குழுவினருடன் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டில்லி சென்றனர். நேற்று அவர்கள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினர். இன்று இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அண்ணாமலை கூறியிருந்தார்.
அறிவிப்பு
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் குழுவினர் டில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம வள பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும், பல கலாசார பாரம்பரிய தளங்களும் உள்ளன என அவர்கள் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர்.சுரங்க அமைச்சகம் 2024 டிச.,24ல் வெளியிட்ட அறிக்கையில், ' டங்ஸ்டன் ஏல நடைமுறைக்கு பிறகு, அப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில் ஏலத்துக்கு எதிராக கருத்துகள் பெறப்பட்டு உள்ளன,' எனக்கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜன.,22 அன்று நடந்த சந்திப்பின் போது, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அமைச்சரிடம் குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இக்குழுவினர் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டறிந்த மத்திய அமைச்சர் பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.
விரிவான ஆலோசனைக்கு பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் கொண்டாட்டம்
ஏலம் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரிட்டாப்பட்டி ,நாயக்கர்பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
நான் முதல்வராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது.
இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு வாழ்த்து
அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். இது மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும். டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை எதிர்த்தும், இவ்விவகாரத்தில் மேலூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதமாக நான் சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் விடியா திமுக-வின் கபட நாடகத்தை எடுத்துவைத்து பேசியதன் தொடர்ச்சியாக அதிமுக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.தங்கள் உரிமைகளுக்காக, தொடர்ந்து போராடி வென்ற மேலூர் மக்களுக்கு எனது வாழ்த்துகள். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த ஸ்டாலின் மாடல் திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலூர் மக்களின் போராட்டத்தை உணர்ந்து, அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ததன் மூலம் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
பா.ம.க., தலைவர் அன்புமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், இடதுசாரி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.