சயிப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்; சந்தேகம் கிளப்பும் மஹா., அரசியல்வாதிகள்!

4


புனே: பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து மஹாராஷ்டிரா அமைச்சர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் மும்பை பாந்த்ராவில் உள்ள பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான். இதில், அவர் 6 இடங்களில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் முதுகு தண்டவடம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சைகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இப்படிப்பட்ட சூழலில், 5 நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது நெட்டிசன்களிடையே பல்வேறு கேள்விகளை எழச் செய்தது.

இந்த நிலையில் நடிகர் சயிப் அலிகான் மீது உண்மையாலுமே தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது நாடகமாடுகிறாரா? என்று மஹாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் கூறியதாவது: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சயிப் அலிகானை பார்க்கும் போது, அவர் மீது உண்மையாலுமே கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது நடிக்கிறாரா? என்ற சந்தேகம் வருகிறது.

சயிப் அலிகானுக்கு பிரச்னை என்றதும் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவிக்கின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிதேந்திரா மற்றும் பாராமதி தொகுதி எம்.பி., சுப்ரியா சுலே ஆகியோர் சயிப் அலிகான், ஷாருக்கானின் மகன், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் ஆகியோருக்கு கவலை தெரிவிக்கின்றனர்.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு இவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?. இவர்கள் ஏதாவது ஒரு ஹிந்து பிரபலங்களுக்காக கவலைப்பட்டு நீங்கள் பார்த்துள்ளீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத்தும் சயிப் அலிகான் கத்திக்குத்து பட்டு விரைவில் குணமாகி டிஸ்சார்ஜ் ஆனது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். 'சயிப் அலிகான் மீண்டு வந்தது மருத்துவ அதிசயம். அவரது உடல்நலம் பெற வாழ்த்துகிறேன். கத்தி எவ்வளவு ஆழத்திற்கு குத்தியது என்பது விஷயமல்ல. அவர் எழுந்து நிற்கும் அளவுக்கு லீலாவதி மருத்துவமனை மருத்துவர்கள் அதிசயத்தை நிகழ்த்தி காட்டியுள்ளனர்', எனக் கூறினார்.

Advertisement