செக் மோசடி வழக்கு: பாலிவுட் இயக்குநருக்கு 3 மாத சிறை
மும்பை: செக் மோசடி வழக்கில், பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு 3 மாத சிறை தண்டனை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா சமீப காலங்களாக தனது சர்ச்சையான பேச்சுக்களால் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக அவரது படங்கள் தான் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் ஆகும் போதும் பரபரப்பை ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அனல் பறக்கும், ரத்தம் தெறிக்கும் அதிக அளவு வன்முறை காட்சிகளுடன் தனது படங்களை கொடுத்து வந்தவர் ராம்கோபால் வர்மா. இவரது நிறுவனத்திற்கு எதிராக ஸ்ரீ என்ற நிறுவனம் மும்பை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. அவர் கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனை விசாரித்த மும்பை நீதிமன்றம், ராம் கோபால் வர்மாவுக்கு மூன்று மாத சிறை தண்டனையும் ரூ.3.72 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டது. இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்காவிட்டால், மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டு ஜாமினில் வெளியே வர முடியாத வாரண்ட் பிறப்பித்து உள்ளது. தீர்ப்பு வழங்கிய போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
ராம் கோபால் வர்மா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த வழக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்டது. ரூ.2.38 லட்சம் தொகைக்காக தொடரப்பட்டது. விசாரணையில் எனது வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். நீதிமன்றம் முன்பு விசாரணை உள்ளதால், இது குறித்து எதுவும் கூற முடியாது என தெரிவித்து உள்ளார்.