இலக்கை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை; பிரதமர் மோடி
புதுடில்லி: மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23ம் தேதி வீர தீர தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2022ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
சுபாஷ் சந்திர போஸ் பிறந்த புனித நாளில், முழு நாடும் அவரை மரியாதையுடன் நினைவுகூர்கிறது. நான் அவருக்கு தலைவணங்குகிறேன். இந்த ஆண்டு நேதாஜியின் பிறந்தநாளை அவரது பிறந்த இடத்தில் கொண்டாடுகிறோம். இதற்காக ஒடிசா அரசுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவர் விரும்பினால், ஒரு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கலாம்.
அவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராட துவங்கினார். இன்று நாம் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க ஒன்றுப்பட வேண்டும். உலகளவில் சிறந்தவர்களாக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். இன்று, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதில் நம் நாடு மும்முரமாக இருக்கும்போது, நேதாஜி சுபாஷின் வாழ்க்கையிலிருந்து நாம் தொடர்ந்து உத்வேகம் பெறுகிறோம். நமது நாட்டில் இருக்கும் ஒற்றுமை இன்று வளர்ந்த இந்தியாவிற்கு ஒரு பெரிய பாடம்.
கடந்த பத்தாண்டுகளில் 25 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய வெற்றியாகும். இன்று, கிராமம் அல்லது நகரமாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் நவீன உள்கட்டமைப்புகள் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்திய ராணுவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இன்று உலக அரங்கில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது, இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. நேதாஜி சுபாஷின் உத்வேகத்துடன் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.