போலீசாருக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை; அரசு மீது அன்புமணி காட்டம்
சென்னை: போலீசாருக்கு தெரிந்தே கஞ்சா விற்கப்படுகிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
ராணிப்பேட்டையை சேர்ந்த பா.ம.க., தொண்டர் தமிழரசு பெட்ரோல் குண்டுவீசி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு, அக்கட்சி தலைவர் அன்புமணி நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அன்புமணி கூறியதாவது: தமிழகத்தில் என்ன சட்டம் ஒழுங்கு இருக்கிறது? என்ன நிர்வாகம் நடக்கிறது? ராணிப்பேட்டை மாவட்டம் பதற்றமாக இருந்து கொண்டு இருக்கிறது.
பெட்ரோல் ஊற்றி எரித்து இளைஞரை கொலை செய்துள்ளனர். நாங்கள் சோகத்தில் இருக்கிறோம். பெட்ரோல் ஊற்றி கொலை செய்யும் அளவுக்கு தைரியம் இருக்கிறது. 6 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒருசில தலைவர்களின் தவறான வழிகாட்டுதலால் இந்த மாதிரியான கொடுஞ்செயல்கள் அரங்கேறுகின்றன.
அத்துமீறி, அடங்கமறு, திருப்பி அடி என தொண்டர்களை ஒரு சில இயக்க தலைவர்கள் தூண்டி விடுகின்றனர். இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு, கொடூர சம்பவங்கள் நடக்கிறது. இது போலீசாருக்கு தெரிந்தே நடக்கிறது. போலீசாருக்கே தெரிந்தே கஞ்சா விற்கப்படுகிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும். முதல்வரின் கீழ் தான் காவல்துறை இயங்கி கொண்டு இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தமிழரசின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.