பிரிட்டனில் 'எமர்ஜென்ஸி' படத்தை திரையிட தடையா: இந்தியா எதிர்ப்பு
புதுடில்லி: பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்த ' எமர்ஜென்ஸி' திரைப்படத்தை பிரிட்டனில் திரையிடுவதற்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் இடையூறு செய்வதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்த எமர்ஜென்சி படம் கடந்த சில நாட்களுக்கு வெளியானது. பிரிட்டனில் பர்மிங்ஹாம், லண்டன் மேற்கு உள்ளிட்ட பல நகரங்களில், இந்த திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்ட திரையரங்குகளுக்குள் முகமூடி அணிந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தினர். சீக்கியர்களுக்கு எதிரான கருத்துகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து திரைப்படம் திரையிடப்படுவது தடைபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக டில்லியில் நிருபர்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: திரைப்படத்திற்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் இடையூறு ஏற்படுத்துவது குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. வன்முறை நிறைந்த போராட்டம் மற்றும் அதனை இந்திய எதிர்ப்பு சக்திகள் தூண்டிவிடுவது குறித்து பிரிட்டன் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்தை வெளிப்படுத்துவதை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அமல்படுத்தக்கூடாது. திரைப்படத்தை தடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இதற்கு காரணமானவர்கள் மீது பிரிட்டன் நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது. இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து லண்டனில் உள்ள நமது தூதரகம் அவர்களுடன் தொடர்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.